About the Book
‘தவளையும் இளவரசியும்’ என்ற சிறுவர் புனைகதையில் வருகின்ற இளவரசி, எப்படி அந்த அசிங்கமான தவளையை முத்தமிட்டு அதை ஓர் அழகான இளவரசனாக மாற்றத் தயங்கினாளோ, அதுபோலவே, நம்முடைய கனவுகள் மெய்ப்படுவதை நம்முடைய தயக்கத்தால் நாமே தடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் எவற்றையெல்லாம் அடைவதற்கான திறமை பெற்றுள்ளோமோ, அவற்றை அடைவதிலிருந்து, நம்முடைய எதிர்மறை எண்ணங்களும் உணர்வுகளும் மனப்போக்குகளும் நம்மைத் தடுத்துக் கொண்டிருக்கின்றன.
பல வெற்றிப் படைப்புகளுக்குச் சொந்தக்காரரான பிரையன் டிரேசி, தன் மகளும் உளவியல் ஆலோசகருமான கிறிஸ்டினா டிரேசி ஸ்டைனுடன் சேர்ந்து எழுதியுள்ள இந்நூலில் கூறப்பட்டுள்ள, ஆற்றல் வாய்ந்த பல உத்திகளும் பயிற்சிகளும், நீங்கள் எதிர்கொள்கின்ற அனுபவங்கள் முதலில் எவ்வளவு சவாலானவையாகத் தோன்றினாலும்கூட அவை ஒவ்வொன்றிலிருந்தும் பயனுள்ளவற்றைக் கண்டறியக்கூடிய விதத்தில் நீங்கள் உங்களுடைய மனப்போக்கை மாற்றிக் கொள்ள உங்களுக்கு உதவும். அசைக்கப்பட முடியாத தன்னம்பிக்கையை உருவாக்கிக் கொள்வதற்கும், உங்களுடைய மிகச் சிறந்த வடிவமாக நீங்கள் உருவெடுப்பதற்கும், ஓர் அசாதாரணமான வாழ்க்கையை வாழத் தொடங்குவதற்கும் தேவையான அனைத்தையும் இந்நூலிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்வீர்கள் என்பது உறுதி.
About the Author(s)
பிரையன் டிரேசி
உலகில் இன்று தலைசிறந்த வியாபாரப் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் பிரையன் டிரேசி. 75 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் அதிகமான பெருநிறுவனங்களுக்கும் 10,000க்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தலைமைத்துவம், மேலாண்மை, விற்பனை, வியாபார மாதிரி மறுசீரமைப்பு, இலாப மேம்பாடு ஆகிய விஷயங்களில் பல கருத்தரங்குகளை அவர் வடிவமைத்து வழங்கியுள்ளார். பிரையன் டிரேசி ஒரு வெற்றிகரமான நூலாசிரியர். அவர் 80க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். அவை 42க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. அவருடைய விண்ணளவு சாதனை, சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள், சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள், இலக்குகள், காலை எழுந்தவுடன் தவளை ஆகிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.
கிறிஸ்டினா டிரேசி ஸ்டைன்
கிறிஸ்டினா, உளவியலில் இளங்கலைப் பட்டமும், சிகிச்சைசார் உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அதோடு, திருமணம் மற்றும் குடும்ப உறவு தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதற்கான உரிமமும் பெற்றுள்ளவர் அவர். இப்போது அவர் வாழ்க்கைமுறைப் பயிற்றுவிப்பாளராக இருந்து வருகிறார். சொந்தமாகச் சிகிச்சைசார் உளவியல் ஆலோசனைகள் வழங்குகின்ற மையத்தைத் துவக்குவதற்கு முன்பாக அவர் பல பெருநிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். தனிநபர்கள், தம்பதிகள் மற்றும் குழுக்களுக்கு அவர் ஐயாயிரம் மணிநேரத்திற்கும் அதிகமாக உளவியல் ஆலோசனைகளையும் தனிப்பட்ட அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.